Wednesday, June 9, 2010

இளவஞ்சி (சிறுகதை பாகம் 1)



அன்றிரவு வழக்கத்திற்கு மாறாக அதிக கூட்டமிருக்கும் என்ற எதிர்பார்ப்பு. பக்கத்து தெருவில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா. சுற்று வட்டாரத்திலிருந்து பலரும் வந்திருந்தனர்.

முந்தைய நாள் செய்த வேலையின் களைப்பின் காரணமாக என்னால் காலையில் கோவிலுக்கு செல்ல இயலவில்லை. சற்று அயர்ந்து உறங்கிவிட்டேன். ஆனால், இன்றிரவு இரத ஊர்வலத்திற்கு நிச்சயம் வருகிறேன் என்று தோழிகளிடம் சொல்லியிருந்தேன். கடிகார முள் நான்கை மட்டுமே எட்டி பார்த்திருக்கும் வேளையில் குளியல் சத்தமும், என் தோழிகளின் பேச்சு சத்தமும், நிமிடங்களுக்கு ஒரு முறை சிரிப்பொலியும் ஒலித்துக்கொண்டிருந்தது.

அடியே இளவஞ்சி, ணியாச்சுடி. எழுந்து கிளம்பு. ரத ஊர்வலம் வரதா வாக்கு கொடுத்தலே?”

நர்மதாவின் குரல். ஐந்து அறைகளுக்கு கேட்கும் அளவிற்கு குரல் கொடுத்தாள். சரி என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டி திரும்பி படுத்தேன். நிதானம் இழந்தவளாய், உள்ளே வந்த நர்மதா என்னை கைபிடித்து இழுத்து உட்கார வைத்தாள். என் நெருங்கிய தோழி அவள். என்னை நன்கு அறிந்தவளும் அவளே.

எழந்து அமர்ந்த நான் என் ஆடைகளை சரிப்படுத்திகொண்டேன். போர்வையை மடிக்க ஆரம்பித்தேன். எதையோ சாதித்த ஆணந்தத்தில் நர்மதா தன் நெஞ்சு வரை கட்டி இருந்த துண்டை இருக்கி கட்டிகொண்டு எழுந்து நடந்தாள். நானும் என் குளியலுக்கு வேண்டியதை எடுத்து வைக்க ஆரம்பித்தேன்.

சென்ற வாரம் நான் வாங்கி வைத்த புதிய பட்டுபுடவையை தூக்கி கட்டில் மேல் போட்டு விட்டு குளிக்க சென்றேன். கடைத்தெருவின் மேல் மாடி அது. என்னோடு சக தோழியர் பதினான்கு பேர் தங்கும் அளவிற்கு பல அறைகளை பலகையால் பிரித்து வைத்து கட்டி இருந்தான், அந்த இடத்தின் சீன முதலாளி. அனைவரும் பயன்படுத்த ஒரேயொரு குளியலறை, ஒரு கழிவறை.

யாரடி உள்ளே?”

பவானி குளிக்கிறாடிஎன்றாள், அபிதா.

அய்யோ, அவ உள்ளே போனா அரை மணி நேரம் ஆகுமே

கவலையை விடுடி. அவ உள்ளே போய் இருவத்தி அஞ்சு நிமிசம் ஆகுது.”

அபிதாவின் பதிலில் எல்லோரும் சிரித்தனர். பவானி, அபிதாவிற்கு பிறகு நான் குளித்து வெளியேற ஏறக்குறைய அரைமணி நேரம் ஆனது. அறையெல்லாம் வளையலும், கொலுசுகளும் கொஞ்சி பேசிக்கொண்டிருந்தன. மனதிற்குள் மௌனமாய் சிரித்துக் கொண்டு என் அறையினுள் நுழைந்தேன். கட்டில் மேல் நான் போட்ட சேலை என்னை பார்த்து சிரித்து கொண்டிருந்தது.

தஙக கூனிட்ட, ஜன்னலிட்ட ரவிக்கையை எடுத்து அணிந்து கொண்டேன். மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தையல்காரர், ரவிக்கை தைப்பதில் கைத்தேர்ந்தவர். நான் அவருக்கு மாதத்திற்கு மூன்று ரவிக்கையாவது தைக்கும் அளவிற்கு வியாபாரம் கொடுப்பேன். அவரும் நான் கேட்ட நேரத்தில் ரவிக்கை தைத்து கொடுப்பதால் சற்று அதிகமாகவே பணம் கொடுப்பேன். ஆகவே, சந்தையில் வரும் புதியடிசைன்’-களை எனக்கு அறிமுகப்படுத்திடுவார். அதில் ஒன்றுதான் இந்த ரவிக்கை.

ரவிக்கை, பாவடையோடு கூடத்திலுள்ள கண்ணாடி மேசைக்கு வந்து அமர்ந்தேன் அலங்காரம் முடித்துகொண்டு சேலை கட்டுவதே எனக்கு சௌகரியம். என் முடியை இழுத்து ஜடை பின்ன ஆரம்பித்தேன். ஜடையில் ஒரு ரோஜா மலரை சொருகி ஐந்து முழ மல்லிகை சரத்தை சூடுவது எனக்கு விருப்பம். எனக்கு அது பொருத்தமாக உள்ளது என்று தோழிகளும் கூறுவர். ஜடை பின்னிய பின் முக ஒப்பனையை ஆரம்பித்தேன்.

அடியே, என்னடி இது? ரவிக்கையில் ஜன்னல் போட சொன்னா உன் தையல் மாமா கதவே போட்டிருக்கிறாரு?”

இல்லடி, இது மார்க்கெட்-ல புதுசா வந்த டிசைன்-, அதான் அதையே வச்சு தெக்க சொல்லிட்டேன்

அடியே இளவஞ்சி, அவருக்கு உன் மேலே ஒரு கண்ணுடி. அதான் நீ போகும் போது மட்டும் புது புது டிசைன்-ஆ காட்டுராரு. நாங்க போனா, அதே வெத்தலை டிசைன் போட்டுரவாமா-னு கேட்குராரு

அடி போடி, அவரு வயசானவருடி. நான் அவருக்கு நிறைய ஆர்டர் கொடுக்குரதாலே எனக்கு புது டிசைன்களை காட்டுராரு. அவர போய் எப்படி-டி?”

தோடா, தையல் மாமாவுக்கு வக்காலத்து, போன வாரம் ஒரு வயசானவரை பத்தி அபிதா சொன்னாலே, ஞாபகம் இருக்கா?”

ஏய், கோயிலுக்கு போறப்ப உனக்கு என்ன கதை? போய் கிளம்பு போ. மணியாகுது.”

சரிடி போறேன்.”

சுஜாதாவுக்கு என்னை அந்த தையல்கார்ரோடு சேர்த்து வைத்து பேசாவிட்டால் தூக்கம் வராது. இதுவரை, அந்த தையல்காரர் என்னிடம் கண்ணியமாகவே நடந்துள்ளார்.

மீண்டும் என் அலங்காரத்தில் முழ்கினேன். கண்ணுக்கு மையிட்டேன். கண்ணத்திலும் கண்ணிமையிலும் வண்ணப்பூச்சு தடவி, உதட்டு சாயம் இட்டுக் கொண்டேன். நர்மதாவின் அறிவுரைக்கேற்ப உதட்டின் கீழ் சிரியதாய் ஒரு கருப்பு பொட்டு இட்டேன். நெற்றியில் பாம்பு வடிவில் ஒரு சிகப்பு பொட்டு வைத்தேன். அது பிரத்தியேகமாய் என் புடவைக்காகவே தேடி வாங்கியது. கண்ணாடியில் என்னை நானே சற்று ரசித்து விட்டு அறையினுல் செல்லும் போது, நிர்மலா புடவை முந்தானையை கையில் பிடித்து கொண்டு என்னை பார்த்து சிரித்து படியே வந்தாள்.

இளவஞ்சி, இளவஞ்சி நீதான் அழகா முந்தாணையை மடிப்பியே, அதே மாதிரி எனக்கு மடிச்சி கொடேன்.”

அதானே பார்த்தேன், ஆளே காணோமே-னு. என்னடி நீ, அஞ்சு வருசமா புடவை கட்டுரே, இன்னமும் முந்தானையை அழகா மடிக்க தெரியலை”

”எல்லாம் உன் கைப்பக்குவம் மாதிரி வருமாடி, ஆ... வலிக்குதுடி, பாத்து ஊக்கை குத்துடி”

“இதை மட்டும் ஒவ்வொரு தடவையும் சொல்லிடு.”

நிர்மலா கட்டி இருந்த சந்த்தன நிறப் புடவை அவளுக்கு மிகவும் பொறுத்தமாக இருந்த்து. அவளுக்காக ‘அவர்’ வாங்கியதாம். எல்லோரிடமும் பெருமையடித்துகொண்டாள். எதுவும் நிரந்தரம் இல்லை என்று தெரிந்தாலும் அப்படி சொல்வதில் அவளுக்கு ஓர் ஆண்ந்தம்.

என் புடவையும் சும்மா சொல்வதற்கில்லை. ‘மௌனராகம்’ படத்தில் ரேவதி கட்டிய சேலை ’டிசைன்’-ஆம், அதனால் தான் உடனே வாங்கினேன். இரத்த சிகப்பாய், பெரிய பட்டு ஜரிகையோடு இருக்கும். ஆங்காங்கு பட்டு நூலால் சின்ன சின்ன ‘டிசைன்’கள் இருக்கும். சேலை முடிச்சை இடுப்பில் சொருகினேன். கொசுவ மடிப்பை ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து மடித்தேன். என் செப்பலை அணிந்துக் கொண்டு தரை தொடும் அளவிற்கு வைத்து கொசுவத்தை சொருகினேன். முன்னும் பின்னும் நடந்து கொசுவ மடிப்பை சரிபார்த்து, அழகு பார்த்து என் முந்தானைக்கு சென்றேன். உள்ளங்கை அளவிற்கு முந்தானையை மடித்து என் ரவிக்கையோடு குத்தி கொண்டேன்.

அலமாரியில் என் துணிக்கடியில் வைத்திருந்த நகை பெட்டியை வெளியே எடுத்து சிகப்பு, பச்சை கல்லிட்ட ஜிமிக்கி தோடை எடுத்து மாட்டினேன். தங்க அட்டிகை எடுது கழுத்தோடு பூட்டினேன். காசு மாலையா, மாங்காய் மாலையா என்ற குழப்பத்திற்கு பிறகு காசு மாலையை தேர்ந்தெடுத்தேன். எனக்கு மட்டும் அல்ல. என்னுடன் தங்கி இருக்கும் மற்ற பதினான்கு பேரையும் மகளாய் ஏற்ற அம்மா, ஆளுக்கொரு காசு மாலையும், மாங்காய் மாலையையும் வாங்கித் தந்திருந்தாள். இறுதியாய், நன்றாக ஒலிய்ழுப்பும் கொலுசு ஒன்றெடுத்து என் காலில் கட்டினேன். நடக்கும் போது, ஜல் ஜல் என்ற கொலுசு சத்தமும், நான் அணிந்திருக்கும் கண்ணாடி வளையலின் மோதலும் எனக்கு ஒரு வித மகிழ்ச்சியையும் நானத்தையும் தந்தது.


தொடரும்...

6 comments:

  1. nice da.....al de best......

    ReplyDelete
  2. very nice sirukathai...very detailed...enjoyed it

    ReplyDelete
  3. நன்றி நித்யா மற்றும் விஜயா...

    ReplyDelete
  4. பயன்படுத்தப்பட்ட சொற்களும், உவமைகளும் சிறப்பு....வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. oru poonu eppadi irakum intha page
    soluthu...
    full story?\from vicky fb

    ReplyDelete