Tuesday, January 17, 2012

ஜாதியாமே???

சில நாட்களுக்கு முன் கவிஞர் வைரமுத்து செதுக்கியவில்லோடு வா நிலவேஎன்ற ஒரு புத்தகத்தை படித்தேன். என்ன ஓர் அழகான காதல் காவியம். ஒவ்வொரு வார்த்தையிலும், ஒவ்வொரு வரியலும் கவி நயம் நிறைந்து வழிந்தது. நாவலை ஒருவர் பாடியது போல இருந்தது.

பல வரலாற்று புத்தகங்களை அலசி ஆராய்ந்து, ஆதரங்களுடன் எழுதி இருக்கிறார் கவிஞர். அந்த காலத்தில் இருந்த பழக்க வழக்கங்களையும், பல நடப்புகளையும் ஆதராங்களுடன் மேற்கோள் காட்டி இருந்தார். படிக்க படிக்க திகட்டாத பொக்கிசம் அது.

கதையில் காதல் மிகுந்திருந்தாலும், அதில் ஜாதி மத வேறுபாட்டிற்கும் ஒரு முக்கிய பங்கு இருந்தது. கதையின் அமைப்பிற்கும், நடைக்கும், திருப்பங்களுக்கும் இந்த பேதம் பெரும் பங்காற்றியது. தொழில், மற்றும் நிலையை பொறுத்து வருனபேதம் என்று இதை கவிஞர் குறிப்பிட்டுருந்தார். நாவலின் முடிவில் நாயகன் சேரலாதன் என்ற மன்னன் தன் உயிர் நண்பன் உம்பர்காடனை இழந்து, தன் நாட்டை துறந்து தன் மனதிற்கு ஒத்த, கவியில் சிறந்த நச்செள்ளை என்ற நங்கை போதும் என்று வனம் செல்கிறான். (முழு கதை தெரிய கவிஞர் வைரமுத்து எழுதியவில்லோடு வா நிலவேஎன்ற புத்தகத்தை தேடி படியுங்கள்)

இந்த நாவலை படித்து முடித்த பிறகு, மலேசியாவில் இருக்கும் நமது இந்தியர்ளின் மன நிலை தான் என் ஞாபகத்திற்கு வந்தது. நமது மலேசியர்கள் ஏற்கனவே, மலாய், சீனர், இந்தியர் என்று மூன்று இனமாக இருக்கிறோம். அதனூடே, இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்துவம், சீக்கியம், இந்து என்று மதங்களால் பிரிந்திருக்கறோம். போதாக்குறைக்கு இந்தியர்களுக்குள்ளேயே தமிழ், மலையாளம், தெலுகு, இந்தி, கன்னடம் என்று மொழிகளாலும் வேறுபட்டிருக்கிறோம். இந்த வேற்றுமைகளில் அர்த்தம் இருக்கிறது: கலை கலாச்சாரம் இருக்கிறது: அழகு இருக்கிறது. ஆனால், வை அணைத்தும் போதாது என்று ஜாதி என்று எதையோ ஒன்றை இனைத்து சிலர் அலைகிறார்கள்.

ஜாதியை பற்றி நான் மிக பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்யவில்லை. பல நூல்கள் அலசவில்லை. என் தனிப்பட்ட கருத்தையும், கேட்டறிந்ததையும் பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு நன்கு பழக்கமான ஒரு இந்திய நபரிடம் பேசி சில விசயங்களை சேகரித்தேன். உங்களோடு இந்தியாவில் அந்த காலத்தில், செய்யும் வேலையை பொறுத்து ஜாதிகள் உருவாக்கப்பட்டது. பொதுவாக கீழ்ஜாதி மேல்ஜாதி என்று இரண்டு.

மேல் ஜாதி என்று பொதுவாக முக்குலம் எனப்படும் தேவர், மரவர்/அகமுடியர், கள்ளர் என்று சொல்கின்றனர். இவர்கள் வீரதீர செயல்களில் ஈடுபடுபவர்கள். கத்தி அருவாள் என்று எடுத்து நியாயத்திற்கு பாடுபடுபவர்கள். இருப்பவர்களிடமிருந்து திருடி/அபகரித்து இல்லாதவர்களுக்கு கொடுப்பவர்கள். இவர்களுக்காகவே அக்காலத்தில் சிறைச்சாலை உண்டானதாம். ஆகவே, இவர்கள் மேலாக கருதப்பட்டனர்.

கீழ்ஜாதி என்று பல ஜாதிகளின் பெயரையும் தொழிலையும் என்னோடு பகிர்ந்தார். துணிகளை துவைப்பவர்களை வன்னார் என்றும், டப்பு அடித்து (பரையடித்து) ஊருக்கு செய்தி சொல்பவர்களை பரையர் என்றும், மண்ணால் பண்ட பாத்திரங்கள் செய்பவர்களை குயவர் என்றும், செருப்பு தைப்பவர்களை சக்கிலியர் என்றும், முடி திருத்துபவர்களை அம்பட்டையர் என்றும் கூப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

அதோடு முதலியார் எனப்படுபவர்கள் பண்ணைகளை பராமரிப்பவர்களாகவும், பண்டாரம் என்பவர்கள் பூ கட்டியும், சமயல் செய்பவர்களாகவும், கோவில் பூஜைகளில் ஈடுபடுபவர்களை ஐயர் என்றும் அன்று வழங்கப்பட்டது.

இப்படி அவர்கள் பிழைப்புக்காக செய்த வேலையை கொண்டு அவர்கள் ஜாதி நிர்ணயிக்கப்பட்டது.

இன்று நமது மலேசிய திருநாட்டிலே, பலர் இன்னமும் இந்த ஜாதியை பின்பற்றி வருவது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. இந்த விசயத்தை என் நண்பரிடம் கூறிய பொழுது அவர் திகைத்து போனார். “என்ன ஐயா சொல்றீங்க, இந்தியாவிலே இந்த ஜாதி பார்பதெல்லாம் குறைஞ்சு போச்சு. இவ்வளவு ஏன் கோவிலிலே திறமையும், தக்க தகுதியும் உள்ள யார் வேண்டுமானாலும் குருக்கள் ஆகலாம் என்ற சட்டமே இருக்கு பா.” என்றார்.

நமது இந்தியர்களில் சிலர் ஒருவரை திட்டும்போதுபரையன், சக்கிலியன்என்று சொற்களை பயன்படுத்துவதை நான் கேட்டிருக்கிறேன். அந்த தொழிலை செய்தது அவர்கள் குற்றமா? செய்யும் தொழிலே தெய்வம் என்கிறோம். பிறகு ஏன் பாகுபாடு? அவர்கள் இல்லை என்றால் நம் துணி வெளுத்திருக்காது, செருப்பு உழைத்திருக்காது, தகவல் கிடைத்திருக்காது, முடிதிருத்தபட்டிருக்காது.

கொடுமை என்ன வென்றால், நமது மலேசியர்கள் ஏன், எதற்கு என்று தெரியாமலேயே இந்த ஜாதி பெயர்களை சொல்லி அலைகின்றனர். அந்த பெயரின் பின்னனி என்ன அன்று கேட்டால் கண்டிப்பாக முக்கால்வாசி பேருக்கு தெரியாது. அந்த ஜாதி கீழ்தரமானது என்ற ஒரேயொரு காரணத்தை கொண்டு திட்டும்போதும், ஒருவரை வெறுத்து பேசும் போதும் பயன் படுத்துகின்றனர். அறிந்தவர்கள், அதனை பின்பற்ற மாட்டார்கள்.

சில சம்பவங்களை உதாரணமாக சொல்கிறேன். எனக்கு தெரிந்த தோழி ஒருத்தி விமான நிலையத்தில் அதிகாரியாக வேலை செய்தார். தன்னுடன் சக அதிகாரியாக வேலை செய்த ஒருவருடன் காதல் கொண்டு தன் பெற்றோருக்கு விசயத்தை சொன்னார். அவள் தந்தை அந்த பையன்பரையன்ஜாதி என்று தெரிந்தவுடன், அவனை பார்க்காமலேயே நிராகரித்து விட்டார். என் தோழி வேறு வழியின்றி வேறு ஒருவனுக்கு கழுத்தை நீட்டினாள். என்ன கொடுமை இது? மகளே முடிவு எடுத்து அவசர படாமல் வந்து காதலை சொல்லும் போது, பையனின் வேலை, கல்வி, குடும்பம் என்று பாராமல் இப்படி ஜாதியை அடிப்படையாக கொண்டு வாழ்கிறார்களே என்று தோன்றியது.

இந்த சம்பவத்தால் பாதித்து என் மன குமுறலை ஒரு வயதான பாட்டியிடம் பகிர்ந்தேன். “அவரு செஞ்சது சரிதான், பரையன்னு தெரிஞ்சு பொண்ணை எப்படி கொடுக்கிறதுஎன்றார். எரிச்சலுடன் நான் சொன்னேன், “அவங்களுக்கு என்ன குறை? நம்மல மாதிரி காது, மூக்கு, வாய் தானே இருக்கு? நம்மல மாதிரி தான் வீட்டிலே தங்குறாங்க, படிக்கிறாங்க, வேலையும் செய்றாங்க. அப்புறம் என்ன தடுக்குது உங்களை?”. “டேய், உனக்கு என்ன தெரியும்? அவங்க மாடு சாப்பிடுவாங்க தெரியுமா?” என்றார் மிகுந்த பதற்றத்துடன்,

எனக்கு சிரிப்புதான் வந்தது. மாடு சாப்பிடுவது அவரவர் விருப்பம். நான் மாடு சாப்பிடுவதால் தேகம் எரிந்து சாகபோவதுமில்லை, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்க போவதும் இல்லை. சரி விடுங்கள். எனக்கு தெரிந்த வரை மலேசியாவாழ் இந்துக்கள் என்றாலே அவர்கள் மாடு சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். மாடு பால் தரும் அன்னை என்று உண்ண மாட்டார்கள். ஆக, பரையர்கள் அதனை விரும்பி உண்ணுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதே சமயத்தில், உயர்தகுலம் என்று குறிப்பிட்டவற்றை சேர்ந்த என் நண்பன் மாடு சாப்பிடுவதை நான் தடுத்ததும் இல்லை. நாளை எனக்கே மாட்டு இறைச்சி சாப்பிடும் நிலை வந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். பதட்ட படவும் மாட்டேன்.

சரி, இந்த மாடு சாப்பிடும் விசயத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று என் இந்திய நண்பரை கேட்டேன். “ஆமா, பாரத் இந்த கீழ்ஜாதி-னு நான் சொன்னவங்க மாடு விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா, அது அவங்க குற்றமும் இல்லை. அவங்க ஏழ்மையிலே வாடுறவங்க. வறுமையான குடும்பம். ஆடு, கோழி வாங்கி சாப்பிடும் அளவுக்கு வசதி பத்தாதவங்க இந்தியாவிலே ஆடு, கோழியை விட மாட்டு இறைச்சி மலிவா கிடைக்கும்.” திகைப்பான ஓர் உண்மையாக இருந்தது. அதனால் தான் அவர்கள் வசதிக்கேற்ப மாடு உண்டார்கள். இதில் என்ன தவறு?

அடுத்ததாக, என குடும்பத்திற்கு பழக்கமான ஒருவர். அவர் எங்கள் குடும்பத்தில் வந்து பழக்கமாகி பத்து வருடங்களுக்கு மேலாக ஆக போகிறது. அவரை நம்பி எங்கள் வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்து அனுப்புவார்கள். சரியான இடத்தில் ஒரு காசு கூட குறையாமல் சேர்த்திடுவார். அவர் பண விசயத்தில் மிக நாணயமாக நடந்து கொள்வார். அவர் கள்ளர் ஜாதி. ஜாதிக்கும் அவர் குணத்திற்கும் சம்பந்தமே இல்லையே.

சரி வயதானவர்களும் இந்தியாவில் இருந்து வந்த சிலரும் தான் இப்படி யோசிக்கிறார்கள் என்றால் இன்றைய இளைஞர்களும் அல்லவா கூட்டு சேர்ந்து ஆர்பரிக்கின்றனர். தலைக்கும் என் தலை முறையாவது இந்த கேட்டை விட்டு தொலைக்கும் என்றால், அவர்களும் சேர்ந்தல்லவா ஜாதி வெறி கொண்டு அலைகின்றனர். பிறக்கும் குழந்தைகளுக்கும் ஜாதி வெறியை ஊட்டுகின்றனர்.

எனக்கு தெரிந்த சிலர்பரையர்”, “சக்கிலியர்போன்ற ஜாதியில் வந்தவர்களை திருமணம் செய்து மிகவும் சிறப்பாகவே வாழ்கிறார்கள். குடும்பமும், சுற்றத்தாரும் தடுத்தும் 20 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்த ஒரு ஜோடி, இன்று வீடு, வாசல், கல்வி, செல்வம் என்று சுகமாக வாழ்கின்றனர். ஜாதி அவ்ர்களுக்கு ஒரு இடையூறும் செய்யவில்லை. வளர்ச்சிக்கும் சந்தோசத்திற்கும் தடை போடவேயில்லை.

நம் திருநாட்டில், எப்பேர்பட்ட கீழ்ஜாதியில் பிறந்தாலும் ஒருவன் சரியான வழிகாட்டியுடனும், உழைப்புடனும் ஒரு மருத்துவராகலாம். மிக உயர்ந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் தப்பான வழிகாட்டியுடனும், நண்பர்களின் ஈர்ப்பினாலும் குட்டிசுவராகி பொறுக்கியாகலாம்.

என்னை கேட்டால் ஜாதி என்பது மலேசியாவில் இருக்க கூடாத, இருக்க வழியே இல்லாத ஒன்று. இருப்பது ஒன்று ஆண்ஜாதி, மற்றொன்று பெண்ஜாதி.. இருக்கும் பிரிவினைகள் போதும். ஒற்றுமையாக இருப்போம். வேற்றுமை பாராது வாழ்வோம்.

ஆக, ஜாதி வேண்டாமே, ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று ஒரு நூற்றாண்டுக்கு முன் சொல்லி வைத்த பாரதி வழி நடப்போம். அவர் கனவை நிறைவேற்றுவோம்.

Saturday, January 7, 2012

நிர்வாகத் துறை மானாக்கள்

வணக்கம், வந்தனம்...

வருக, படித்திடுக...

நிறை கண்டு மகிழ்ந்திடுக,

தவறு இருந்தால் மன்னித்திடுக...

எங்கள் தாய், வளர்ப்பு தாய்,

பசித்தால் ஊட்டிடுவாள்,

தவறு செய்தால் தண்டித்திடுவாள்,

உருவத்தில் சிறியவளாம் புவனேஸ்வரி...

எங்களின் கடைக்குட்டி,

மழலையாய் பேசிடுவாள்,

வெளிநாட்டு மாமன்கொண்ட,

புத்தக புழுவாம் மேனகா...

ட-கரம், த-கரம் அறியாதவள்,

சிறிய விடயமாயினும் தென்சன் ஆகிடுவாள்,

KKB-யின் செயலாளினி,

எங்கள் அன்பு தோழி நித்யா...

உதவி என்றால் ஓடி வருபவள்,

வெளிப்படை பேச்சுக்கு உதாரணம்,

நட்பிற்கு சிறந்த இலக்கணம்,

முட்டை சம்பாலுக்கு புகழ்பெற்ற வித்யா...

குவாந்தானிலிருந்து வந்த மகாராணி,

தனிமை என்பது புதிதல்ல அவளுக்கு,

வேலை செய்வதில் சலிப்பே அடையாதவள்,

ஆணுக்கு இணையாய் இருப்பவள் துர்கா தேவி...

“Touch Wood” என்றால் கையை நீட்டுவாள்,

தலைநகர பதுமை அவள்,

ஆங்கிலம் மறந்து தமிழ்பேச ஆரம்பித்தவள்,

“Hyperkinetics” கதாநாயகி விக்னேஸ்வரி...

“Guitar” என்றதும் நினைவிற்கு வருவான்,

எங்கள் புல பாடகனும், இசையமைப்பாளனும் ஆவான்,

அனுமானம் செய்ய இயலா பன்பு கொண்டவன்,

“Lessah Lepaih“ நிறுவரான அன்பு தீவன்...

ஒவ்வொரு வாக்கியத்திலும் ”லா” சேர்த்திடுவாள்,

அமைதிக்கு எதிர்சொல் இவள் குரலே,

இரவிக்கையில் அழகிய வடிவத்தை கொண்டிடுவாள்,

கவர்ச்சியான அழகுச் சிலையாம் துர்காசினி...

என் மனதில் எழுந்த என் நன்பர்களின் விமர்சிப்பு,

மகிழ்ச்சி என்றால் சிரித்திடுங்கள்,

புண்படுத்தி இருந்தால் மன்னித்திடுங்கள்,

என்றும் உங்களோடு இருப்பேன், உங்கள் அன்பன் பாரத் ராஜ்...

இரயில் பயணம்

இன்று எனக்கு வீட்டில் செம்ம போர். சரி, பக்கத்தில் உள்ள சிரம்பானுக்கு படம் பார்க்கலாம் என்று சென்றேன். அதற்காக இரயில் நிலையத்தில் காத்திருந்தேன்.

எனக்கு அருகிலே ஓர் இந்திய நாட்டை சேர்ந்த நபர் இருந்தார். என்ன நினைத்தாரோ என்னவோ என்னிடம் வந்து தீப்பெட்டி கிடைக்குமா என்று கேட்டார் நானும் தந்தேன். சில நிமிடங்களுக்கு பிறகுதமிழா?” என்று என்னை கேட்டார். நானும்ஆமாஎன்றேன்.

எங்கள் உரையாடல் ஆரம்பித்தது. ஏன் தான் ஆரம்பித்தோம் என்று இறுதியில் நினைத்திருப்பார். பல விசயங்கள் பேசினோம். அவர் கூறிய சில விசயங்கள் என்னை யோசிக்க வைத்தன, சில விசயங்கள் அருவருப்பை தூண்டின.

முதலில் அவர் கூறிய விசயம், பெண்கள். “எங்க ஊரிலே, கெண்டை கால் தெரிஞ்சாலே, அய்யோ யாராவாது பார்பாங்க-னு பொண்ணுங்க பாவாடையை இழுத்து மூடுவாங்க. இங்க என்ன-னா தொடைக்கு மேலே தெரியும் அளவுக்கு உடுத்துராங்கஎன்றார். பிறகு, ஆண்கள், “எங்க ஊரிலே ஆம்பளங்க யாரும் தோடு போட மாட்டாங்க, ஆனா, மலேசியாவிலே, முக்கியமா இந்திய ஆண்கள் எல்லாமே போடுராங்க. ஒரு சம்பிரதாயத்து காது குத்து எங்க நாட்டிலே நடக்கும், ஆனா அதுக்கு பிறகு தோடை கழட்டி பெண் பிள்ளைக்கு தந்திருவாங்க.”

அதற்கு நான் சொன்னேன், இந்த ஊரில் இது நாகரீகமாக கருதப்படுகிறது. அதில் ஏதும் தப்பு இருக்கிறதா எனக்கு தெரியவில்லை. இதோ நான் நகம் வளர்க்கிறேன். அதோ அங்கு ஓர் ஆண் மகன் தன் முடியை கட்டி இருக்கிறான். இதெல்லாம், ஒரு நாகரிகமாவும், எங்கள் இச்சையாகவும் ஆகிவிட்டது. என்னை பொறுத்தவரை மற்றவருக்கு தீங்கு ஏதும் விளைவிக்காத வரை நாம் செய்வது சரியே. மற்றவர்களின் சிந்தனை பற்றி எனக்கு கவலை இல்லை.

அதன் பிறகு தான் எங்கள் பேச்சு ஒரு சுவாரசியமான் கோனத்திற்கு சென்றது. அவர் லட்ச ரூபாய் கட்டி மலேசியா வந்தாராம். வந்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் இரண்டு வருடம் வேலை செய்த பிறகு திருமனம் செய்துகொள்வேன் என்றார். வரும் பெண் 30 பவுன் நகையும் ஒரு மோட்டார் வண்டியுடனும் வருவாள் என்றவுடன் எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

வரதட்சனை பற்றி திரைப்படங்கள்களில் மட்டுமே பார்த்த எனக்கு இப்படி ஒருவர் நேரில் சொன்னது அதிர்ச்சியாகவே இருந்த்து. 30 பவுன் கொடுத்து இவரை மண்ந்து கொள்ளும் அளவிற்கு இவர் பேரழகனாவோ, வசதியான பையனாகவோ தெரியவில்லை. வசதியானவராக இருந்தால் ஏன் மலாயா வரப்போகிறார்.

அவரிடமே சொன்னேன், “என்ன சொல்றீங்க? இன்னும் வரதட்சனை எல்லாம் இருக்கா? அதுவும் 30 பவும் வரைக்கும்?” என்றேன். “அது வரதட்சனை இல்லை, ஆனா எங்க ஊரிலே...” என்று நிருத்தி பேச்சை மாற்றினார்.

என்னை கேட்டார், “இந்த நாட்டிலே நீங்க கல்யானத்திற்கு எவ்வளவு நாள் லீவு போடுவீங்க”. “மிஞ்சி மிஞ்சி போனா ஒரு வாரம், சிலர் ரெண்டு வாரம், வேலையை பொறுத்ததுஎன்றேன்.

’’நாங்க கல்யானத்திற்கு பிறகு ஒரு வருசம் வேலைக்கு போக மாட்டோம் எங்களை போக விடமாட்டாங்கபெருமை ததும்பும் குரலில் தொடர்ந்தார். “எங்க பொண்டாட்டி கொண்டு வந்த நகை நட்டு எல்லாம் அடகு கடைக்கு போர வரைக்கும், பொண்டாட்டி கர்ப்பமாகி தாய்வீடு போரவரைக்கும் வீட்டிலேயே இருப்போம்.”

என்ன கேவலம்என்று மனதில் எண்ணினேன்.

அருமையான வீட்டு சாப்பாடு சாப்பிட்டிருக்கீங்களா? நிம்மதியா உட்கார்ந்து சாப்பிட்டிருக்கீங்களாஎன்றார். எனக்கு சுர்-என்று இருந்தது. நமது அவசர வாழ்கையையும், பொருள்தேடி அலையும் போக்கையும் கூறுகிறாரோ என்று நினைத்தேன். பதில் தேடி நான் சொல்வதற்குள், அவரே பேசினார்.

எங்க பொண்டாட்டிக்கு நாங்க சமைக்கிற வேலையை தவிர வேறு எதையும் தரமாட்டோம்என்றார் மிக கம்பீரமாய்.

எனக்கு கோபம்தான் வந்தது. அவர் பாணியிலே கேட்டேன், ”என்னது? வேறு வேலையே இல்லையா? உங்க ஊரு பாரதி சொன்ன பெண் உரிமையும், பெண் கல்வியும், பெண் விடுதலையும் என்ன ஆச்சு?” என்றேன்.

சற்று தடுமாறினாலும், சமாளிக்கும் தோரனையில் ‘’அப்படி இல்லை, அவங்களுக்கு சம உரிமை கொடுப்போம், வெளியே எல்லாம் கூட்டி போவோம், வருவோம், ஆனா வெளியே சாப்பிடாமா வீட்டுக்கு வந்து தான் சாப்பிடுவோம். அதெத்தான் சொல்ல வந்தேன்.”

திருப்தி அடையாத நான், ”அதெல்லாம் சரிதான், ஆனா பெண்ணுக்கு சமைலறையிலே தானே இன்னமும் வச்சிருக்கீங்கஎன்றேன்.

பெண்ணு படிச்சு வேறே என்னதான் பன்ன போதுஎன்றார்.

உச்சி மண்டையில் மணி அடித்தது எனக்கு. அதே சமயத்தில் சிரம்பானும் நெருங்கி விட்டது.

உங்க ஊரு ஜெயல்லிதா பொம்பலை தானேஎன்றேன்.

ஆனா அவருடைய கல்யானம்என்று ஆரம்பித்தவரை, நிறுத்திஅவர் கல்யான வாழ்க்கையோ, ஊழல் வாழ்க்கையோ, இல்லை அவர் எப்படி இருந்தாரோ என்பது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. ஒரு பெண்ணாக இருந்து நல்ல இடத்தில் இருக்கிறார்தானே. அதே மாதிரி உங்க வீட்டு பெண் பிள்ளைகளை வளர விட்டாதானே அவர்களும் சாதிப்பாங்கஎன்றபடியே ரயிலை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நிலையத்தை விட்டு வெளியாகும் போதுசரி, பார்ப்போம்என்று பிரிந்து நடந்தோம்.

எங்கள் உரையாடல் அவர் மனதிற்கு சிறு மாறுதலை கொடுத்திருந்தாலும் எனக்கு சந்தோசம் தான்.

இந்திய நாட்டை சேர்ந்தவர் இப்படி இருக்கிறாரே என்று குறை கூற இதை எழுதவில்லை. இந்த காலத்திலும் இன்னும் இப்படி பட்டவர்கள் இருக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் தான் எழுதினேன்.

Saturday, December 31, 2011

தெரிந்த புராணம், தெரியாத கதை – கைகேயி கொடியவளா?


இராமயன இதிகாசம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதில் பலதரப்பட்ட கதாபாத்திரம் அமைய பெற்றிருந்தாலும், இராமனே முதன்மை கதாபாத்திரத்தில் அமைந்திருந்தாலும், கைகேயியை யாராலும் மறக்க இயலாது. கைகேயின் சூழ்ச்சியினாலே தான் இராமன் 14 வருடம் வனவாசம் சென்றான்.

பிறந்த்ததிலிருந்து இராமன் மீது வற்றாத பாசத்தோடும், பேரன்போடும், சொந்த தாய் கோசலையைவிட பரிவு காட்டி வளர்த்த தாயா தன் மகனுக்கு இத்தகைய சூழ்ச்சியினை செய்தாள்? அதோடு, பிறந்த்திலிந்து இராமனை, பரதனுக்கும் மேலாக அரவனைத்து வந்தவளை, அவன் ஜானகியை மனமுடிக்கும் வரையிலும் அன்பு மாறாமல் இருந்தவளை கூனியின் சில வார்த்தைகளா மனம் மாற செய்த்தது? தசரதனின் தேர் சக்கரம் விலகாமல் இருக்க தன் கையை அச்சானியை பயன்படுத்தி, அவர் உயிரைக் காத்த புன்னியவதியா தனக்கு கிடைத்த வரங்களை இப்படி சுயநலமாகவும் கீழ்த்தரமாகவும் பயன்படுத்தி இருப்பாள்?

இதற்கு, நான் அறிந்த ஒரு கதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அதாவது, இராமருக்கு பட்டாபிசேகம் என்ற செய்தியை கேட்டவுடன் அனைவரையும் விட கைகேயியே பெருமகிழ்ச்சி அடைந்தாள். அதோடு நிற்காமல் எதிர்க்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சில பிரோகிதர்களை அழைத்து பஞ்சாங்மும் பார்க்க செய்தாள். பஞ்சாங்கத்தை ஆராய்ந்து பார்த்த புரோகிதர்கள், அயோத்தியின் அரியனையில் இந்த பதிநான்கு வருடங்களில் யார் முடி சூட்டபடுகிறார்களோ அவர்களுக்கு உயிர்சேதம் எற்படும் என்று கூறினர். இதை கேட்டு திடுக்கிட்டாள் கைகேயி.

ஆகவே, இராமனை பலி கொடுக்க விரும்பாத அந்த கருனையுள்ளங்கொண்ட தாய், தன் சொந்த மகனான பரதனை தியாகம் செய்ய முடிவெடுத்தாள். அதன் காரணமாகவே, இராமனை பதினான்கு வருட காலம் வனவாசம் செல்ல வேண்டும் என்றும், பரதன் முடிசூட்டபட வேண்டும் என்று தன் வரங்களை தசரிடனிடம் கேட்டான். சொன்ன சொல் தவறுவது அரசன்னுக்கு அழகல்ல. ஆகவே, அவள் வார்த்தையை கனத்த மனத்துடன் தசரதன் நிறைவேற்றி, அந்த துக்கத்திலேயே மரணமும் எய்தினார்.

இவையனைத்தும் அறிய வந்த பரதன் தானும் முடிசூட்டிகொள்ளாது, இராமனின் பாதுகைகளை வைத்து பதினான்கு வருடம் அரசாண்டான். ஆக, புரோகிதர்கள் கனித்த படி எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை.

இந்த பாதுகை சம்பவத்தை நினைவூட்டும் வகையில் இன்றும் பெருமாள் கோயிலில் நம் தலையில் ஆசிர்வதிப்பதற்காக வைக்கபடும் மகுடங்களின் மீது இரு பாதுகை உருவம் இருக்கும். அடுத்த முறை கோவில் செல்லும் போது இதனை கவனித்து பாருங்கள்.

ஆனாலும், என் மனதில் இன்னொரு குழப்பமும் வந்தது. இந்த பஞ்சாங்கமானது கிரதயுகத்தில் பாண்டவர்களில் ஒருவனான நகுலன் தான் வகுத்தான் என்று ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம் உண்டு. கிருஷ்ன அவதாரமானது, இராம அவதாரத்திற்கு பிறகே நடந்தது. அப்படியிருக்க, இராமாயனத்தில் பஞ்சாங்கம் எப்படி வந்திருக்கும்?

இராமனை காட்டுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வந்ததிற்கு தசரதன் பெற்ற ஒரு சாபமும் காரணம் என்று சொல்லபடுகிறது. ஒரு தடவை, தசரத மன்னன் வேட்டையாட செல்லும் போது மான் என்று நினைத்து புதறுக்கு அப்பால் தண்ணீர் எடுத்து கொண்டிருந்த ஒரு சிறுவனை அம்பெய்தி கொன்றுவிட்டார். அச்சிறுவனின் பெற்றோர்கள் இருவரும் குருடர்கள். “நாங்கள் மகனை இழந்து துயரப்படுவதை போல நீயும், துயர்படுவாய்” என்று அவர்கள் இட்ட சாபமே இந்த சம்பவத்தiற்கு வித்திட்டது என்றும் கூறப்படுகிறது.

அனைவருக்கும் தெரிந்த புராணத்தில், சிலருக்கு தெரியாத கதை இது. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.